அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு
விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்
செய்து முடிப்பது அரச அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர்
நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.


வடக்கு மாகாண துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய
ஆளுநர்,பொதுமக்களை தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் வகையில்
அலுவலர்கள் செயற்படக்கூடாது என்றும், அரச அலுவலகங்களை நாடிவரும்
பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க
முடியுமோ அவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


‘மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஆளுநர்
அலுவலகத்துக்கு வருகின்றார்கள். அந்த நிலைமையை மாற்றியமைக்கும்
வகையில் ஒவ்வொரு அலுவலகங்களும் வினைத்திறனாக பணியாற்ற வேண்டும்’
என்றும் ஆளுநர் தெரிவித்தார்.


மேலும், விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினையான அவர்களின்
உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு மற்றும் 10 சதவீதக் கழிவு தொடர்பில்
கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர், ஒவ்வொரு பிரதேச
செயலர் பிரிவிலும் விவசாய உற்பத்திப் பொருள்களைச் சேகரிக்கக் கூடிய
மையங்களை உருவாக்குவது தொடர்பில் ஆராயுமாறும் பணித்தார்.