பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற தனயன்!
கனடாவில் சம்பவம்; தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..!
( வி.ரி.சகாதேவராஜா)
பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் நேற்று(21) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது .
மகனை கனேடிய பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 66 வயது உடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டவராவார்.
தமிழினப் பற்றாளரும் கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு கிழக்கில் வழங்கி வந்தவர்.வருடமொருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர்.அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர்.அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகிறது.
நேற்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார் என்று அவரது சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடனடியாக கனடா போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர் .
பொலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன .
கனேடிய ஊடகங்கள் இந்த செய்தியை இன்று காலை முதல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.