Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
இன்றைய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா - Kalmunai Net

இன்று (14) வியாழக்கிழமை இலங்கையில் பத்தாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.

இத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது? இத் தேர்தல் முறைமை எவ்வாறானது?
என்பது தொடர்பில் இக் கட்டுரை ஆராய்கிறது.

முதலில் தான் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயட்சைகுழுவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ் அடிப்படை வாக்கு கட்டாயமானதாகும்.
அத்தோடு அப் பட்டியலில் தான் விரும்பும் 3 வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்கலாம்.

இது பொதுவான நியதியாகும்.

இருப்பினும் இலங்கையின் இன்றைய தேர்தல் முறையை சற்று ஆழமாக பார்ப்போம்

பாராளுமன்றத் தேர்தலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறையும்

பாராளுமன்ற தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் நடைபெறுகின்றது.

அதாவது தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெறுகின்ற வாக்கு வீதத்திற்கு ஏற்ப ஆசனங்களை, கணித உத்திகளை பயன்படுத்தி பிரித்து வழங்குகின்ற முறையாகும். இதனடிப்படையில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் முறை மூலமும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

தேர்தல் மாவட்ட அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. மொத்தமாக 25 நிருவாக மாவட்டங்கள் உள்ளபோதிலும் அரசியல் யாப்பின் 96 வது உறுப்புரைக்கு அமைய 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதாவது 25 நிருவாக மாவட்டங்களில் யாழ் நிருவாக மாவட்டமும் கிளிநொச்சி நிருவாக மாவட்டமும் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாகவும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நிருவாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னி தேர்தல் மாவட்டமாகவும் கணிக்கப்பட்டு அம்பாறை நிருவாக மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக அழைக்கப்பட்டு 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடு
196 ஆசனங்கள் 22 தேர்தல் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 160 ஆசனங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகைகளின் அடிப்படையிலும் மிகுதி 36 ஆசனங்களும் மாகாண பரப்பளவு அடிப்படையில் அதாவது 1 மாகாணத்திற்கு 4 ஆசனங்கள் என்ற அடிப்படையில் ( 9 x 4 = 36 ) பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

வாக்காளர்களின் தொகையின் அடிப்படையில் 160 ஆசனங்களை பகிர்ந்தளிக்கின்றபோது 22 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் தொகையினை 160 என்ற எண்ணிக்கையால் வகுக்கின்றபோது வருவது தகைமை பெறும் தொகையாகும். இத் தகைமை பெறும் தொகையினைக் கொண்டு ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகையை தனித்தனியே பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்பட்ட தொகையே மாவட்டங்களுக்கான சனத்தொகை அடிப்படையிலான ஆசனங்களாக இருக்கும். இருப்பினும் 160 ஆசனங்களும் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆசனங்கள் தேர்தல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட மிகுதி வாக்காளர் தொகையில் கூடுதலான தொகையினைக் கொண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும். இவ்வாறு பெறப்படும் சனத்தொகை அடிப்படையிலான ஆசனங்களும், மாகாண பரப்பளவு அடிப்படையில் பெறப்படும் ஆசனங்களும் கூட்டப்பட்டு ஒரு தேர்தல் மாவட்டத்துக்கான இறுதி ஆசன ஒதுக்கீடாக அமையும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் முறை
பட்டியல் முறையின் கீழேயே வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளரால் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கான ஆசனத்தொகை வர்த்தமானிப்படுத்தப்படும். ஒவ்வொரு வேட்புமனுவும் குறித்த மாவட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட ஆசன எண்ணிக்கையையோடு 3 ஜ கூட்டிவரும் எண்ணிக்கையைக் கொண்டதாக பட்டியல் தயார் செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்புமனுப் பட்டியலில் குறித்த எண்ணிக்கையில் குறைந்த அல்லது கூடிய எண்ணிக்கையினைக் கொண்டிருப்பின் அப் பட்டியல் நிராகரிக்கப்படும்.
உதாரணம்: திகாமடுல்ல – 7 + 3 = 10

வாக்களிக்கும் முறை
விகிதாசாரப் பட்டியல் முறையின் கீழ் வாக்களிப்பது சற்றுச் சிரமமானது. வாக்காளன் தமது வாக்குகளை அளிக்கும்போது முதலில் தான் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயட்சைகுழுவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ் அடிப்படை வாக்கு கட்டாயமானதாகும். அத்தோடு அப் பட்டியலில் தான் விரும்பும் 3 வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்கலாம். மேலும் அப்பட்டியலில் தான் விருப்பு வாக்கினைப் பயன்படுத்துகின்றபோது இலக்கங்களுக்கு மேலே புள்ளடியிட்டுக் காட்ட வேண்டும். 3 விருப்பு வாக்குகளும் வாக்குச் சீட்டில் அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் ஒரு இலக்கத்துக்கு மட்டும் அல்லது இரு இலக்கங்களுக்கு மட்டும் அல்லது மூன்று இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டுக் காட்டலாம். அல்லது எந்தவொரு இலக்கத்துக்கும் புள்ளடியிடாது விடலாம். ஆனால் தான் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டுவது கட்டாயமாகும்.

கட்சிக்யின் அல்லது சுயட்சைகுழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டாது விருப்பு வாக்குகளுக்கு மட்டும் புள்ளடியிடப்படின் அவ் வாக்குகள் நிராகரிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக்யின் அல்லது சுயட்சைகுழுவின் நேரே புள்ளடியிடப்பட்டிருப்பின் அவ்வாக்கும் நிராகரிக்கப்படும். கட்சிக்கு அல்லது சுயட்சைகுழுவுக்கு இடும் வாக்கானது கட்சி அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெறுகின்ற ஆசனத்தை தீர்மானிக்கும். விருப்பு வாக்குகள் இவற்றின் மூலம் பெறப்பட்ட ஆசனத்துக்கான பிரதிநிதி யார்? ஏன்பதை தீர்மானிக்கும்.

வாக்கு கணிப்பீடு
வாக்கு கணிப்பீடானது பல்வேறு கணித உத்திகளின் பிரயோகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். வாக்கு கணிப்பீடு தேர்தல் மாவட்ட ரீதியாக தனித் தனியாக இடம் பெறும். அப்போது முதலில் இரு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். அத்தேர்தல் மாவட்டத்தில் கூடிய வாக்கினைப் பெற்ற கட்சி அல்லது சுயட்சைகுழு மாவட்டத்தில் குறைந்த வாக்கினைப் பெற்ற கட்சி அல்லது சுயட்சைகுழு, ( 5% குறைந்த ) எவை என அறியப்படும். இதன்படி கூடிய வாக்கினை பெற்ற கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு ஒரு சன்மான/போனஸ் ஆசனம் வழங்கப்படும். குறைந்த வாக்கினைப் பெற்ற கட்சி அல்லது சுயட்சைகுழு அம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 5% ற்கு குறைந்த வாக்கு (வெட்டுப்புள்ளி) பெற்ற கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் அத் தேர்தல் மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியாது என்பதுடன் போட்டியில் இருந்து நீக்கப்படும்.

அப்போது போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களது வாக்குகள் அம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்கிலிருந்து கழிக்கப்படும். அவ்வாறு கழிக்கப்பட்டு வரும் மிகுதியான தொகை தொடர்புடைய வாக்குகள்/ இசைவான வாக்குகள் என அழைக்கப்படும். இத் தொடர்புடைய வாக்குகளை அம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆசன எண்ணிக்கையிலிருந்து ஒன்றினை கழித்து வரும் எண்ணிக்கையினால் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்பட்டு வரும் தொகை விளைதொகை/ முடிவெண்/தகுதிகாண் வாக்கு எனப்படும்.

விளைதொகையினைக் கொண்டு தனித்தனியே ஒவ்வொரு கட்சி அல்லது சுயட்சைகுழு பெற்ற வாக்குகளை பிரிக்க வேண்டும் (5% குறைந்த வாக்குகளைப் பெற்ற பட்டியல்கள் தவிர) இவ்வாறு பிரிப்பதால் வரும் எண்ணிக்கை பட்டியலுக்கான ஆசனங்களாகும். இந்நிலையில் குறித்த ஆசனங்களில் ஏதேனும் ஆசனங்கள் வழங்கப்படாது எஞ்சியிருக்குமானால் அவை பட்டியல்களின் பெரும்பான்மை மிகுதி வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் அவ்வாசனம் வழங்கப்படும். ஒவ்வொரு கட்சி/சுயேட்சைக் குழுக்கள் வெற்றி பெற்ற ஆசனங்கள் கணிப்பிடப்பட்ட பின்னர் அவ்வாசனத்துக்குரிய பிரதிநிதி யார்? என்பது விருப்பு வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இங்கு இடைத்தேர்தல்கள் நடைபெறாது ஒரு வெற்றிடம் ஏற்படுமாயின் அடுத்த முன்னுரிமை அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.

தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடு
தேசிய பட்டியல் முறை என்பது பொதுத்தேர்தல் இடம்பெற்று முடிந்ததும் தேசிய ரீதியாக கட்சி அல்லது சுயட்சைகுழு பெறுகின்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்கின்ற முறையே இதுவாகும். இதன் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றில் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளும் ஓர் வழிமுறையாக இது அமைந்துள்ளது. அதாவது இலங்கை முழுவதும் அளிக்கப்பட்ட கட்சிகள் பெற்ற மொத்த செல்லுபடியான வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படும். இதனை தேசிய ரீதியாக பெற்ற மொத்த வாக்கு எனலாம். இம் மொத்த வாக்குகளை 29 என்ற எண்ணால் பிரிப்பர். இவ்வாறு பெறும் தொகை தகைமைபெறும் தொகை ( ஒரு தேசிய பட்டியலுக்கான ஆசனத்தை பெறும் வாக்கு ) எனலாம். இத் தகைமைபெறும் தொகையினைக் கொண்டு ஒவ்வொரு கட்சியும் தேசிய ரீதியாக பெற்ற வாக்குகளை தனித்தனியாக பிரிப்பர். அப்போது ஒவ்வொரு கட்சிக்குமான தேசிய பட்டியல் ஆசனங்கள் பெறப்படும்.

இன்று நடைபெறும் பத்தாவது பாராளுமன்ற தேர்தல் சரித்திரம் படைக்கும் என்பதில் ஐயமில்லை.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு நிருபர்